குடிநீர் ேகட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குத்தாலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
குத்தாலம்:
குத்தாலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் 6-வது வார்டு மேலத்தெருவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தபகுதியில் மோட்டார் பழுது காரணமாக கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாதிரிமங்கலம் மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உடனடியாக மோட்டார் பழுதினை சரி செய்து தருவதாகவும், அதுவரை பொதுமக்களுக்கு டேங்கர் லாரியின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்வது என உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.