பொதுமக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அம்மாப்பேட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
அம்மாப்பேட்டை ஒன்றியம், மகிமாலை ஊராட்சியை சேர்ந்த அவரைகொல்லை தெருவில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மழைநீர் வடிகால் வசதி, சாலை வசதி மற்றும் சுடுகாட்டுக்கு பாதை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அம்மாப்பேட்டை-தீபாம்பாள்புரம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) முகமது அமானுல்லா, கீழகோவில்பத்து ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், மகிமாலை ஊராட்சி மன்ற தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இன்னும் 2 நாட்களில் அனைத்து பணிகளையும் நிறைவேற்றி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story