பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x

கண்ணமங்கலம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சியில் பெருமாள்பேட்டை, துரிஞ்சாபுரம் கிராமங்கள் செண்பகத்தோப்பு அணை செல்லும் வழியில் வனத்துறை சாலையில் உள்ளது. இந்த சாலை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால் குண்டும், குழியுமாக தண்ணீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது.

இதனால் இவ்வூருக்கு வரும் அரசு நகர பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கமண்டல நதி பாலம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் படவேடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம், சந்தவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக சேறும், சகதியுமாக உள்ள செண்பகத்தோப்பு அணை செல்லும் சாலையில் அப்பகுதி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story