திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் கடைவீதியில் ஜவுளிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் கடைவீதியில் ஜவுளிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது புதிய ஆடைகள், பட்டாசுகள் மற்றும் பல்சுவை பலகாரங்கள் தான். இதன் காரணமாக ஜவுளிகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் திருவாரூர் கடைவீதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து ஜவுளி கடைகள், சாலையோர கடைகளில் மக்கள் குவிந்தனர். இதனால் கடைவீதி மிகுந்த போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது. இதனையடுத்து திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கடைவீதி செல்லும் பாதையில் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கார் வேன், கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருசக்கர வானங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது.
பாதுகாப்பு
இதேபோல் நேதாஜி சாலையில் இருந்து கடைவீதி செல்லும் வழியிலும் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. ஜவுளிகளுடன் வித, விதமான பலகாரங்கள் செய்வதற்காக அனைத்து மளிகை கடைகளிலும் கூட்டம் அதிமாக காணப்பட்டது. போக்குவரத்தினை சீரமைப்பதுடன், எந்த திருட்டுகள் நடைபெறாமல் இருக்க போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.