ஐகோர்ட்டு பதிவாளருக்கு தபால் அட்டைகள் அனுப்பிய பொதுமக்கள்
ஐகோர்ட்டு பதிவாளருக்கு பொதுமக்கள் தபால் அட்டைகளை அனுப்பினர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிகாடு பேரூராட்சியை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேற்று மதியம் சென்னை ஐகோர்ட்டு பதிவாளருக்கு தபால் அட்டை அனுப்பினர். இதில், ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக இருப்பது கோர்ட்டுதான். லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. வறண்ட வெள்ளாற்றில் நீர் ஆதாரமற்ற பகுதியில் எந்தவித முகாந்திரமும் இல்லாமலும், சுற்றியுள்ள கிராமங்களின் விவசாயம் மற்றும் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் அதிகாரிகள் இருக்கின்றனர். வேப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கின்றனர். இது குறித்து ஐகோர்ட்டு தாமாகவே முன்வந்து விசாரணை செய்து, இத்திட்டத்தை நீர் ஆதாரமுள்ள வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். மக்களின் அடிப்படை நீர்வாழ்வாதார உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோரிக்கைகள் குறித்து எழுதப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் அட்டைகளை தபால் நிலையத்தில் உள்ள பெட்டியில் போட்டனர்.