ரேஷன் அல்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது


ரேஷன் அல்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் அல்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை எக்காரணத்தை கொண்டும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

நடமாடும் ஏ.டி.எம். வாகனம்

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று மாலை நடமாடும் ஏ.டி.எம். வாகனத்தின் இயக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் இளஞ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நடமாடும் ஏ.டி.எம். வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

206 கிடங்குகள்

முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் கடந்த ஆண்டில் ரூ.238 கோடி மதிப்பில் 206 கிடங்குகள் நபார்டு உதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது முதலாவதாக 106 கிடங்குகள் திறக்கப்படவுள்ளது. மீதமுள்ள கிடங்குகள் விரைவில் திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் கடன்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரேஷன் கடைகளும் பார்வையிடப்பட்டது. தமிழ்நாட்டில் எபக்ஸ் கூட்டுறவு வங்கியின் 47 கிளைகள், 23 மாவட்ட கூட்டுறவு வங்கியின் 922 கிளைகள், 4,453 வேளாண் தொடக்க நிலை கூட்டுறவு வங்கியின் சார்பாக மொத்தம் ரூ.71,955 கோடி வைப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது. இந்த வைப்புத்தொகை திரும்ப மக்களுக்கே ரூ.64,140 கோடி கடனாக வழங்கப்படுகிறது.

17 வகையான கடனுதவிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் வீட்டுமனைப்பட்டா கடனுதவிகள், கடனுதவி வழங்குவதற்கான வயதை அதிகரித்தல் போன்ற பல்வேறு புதுமையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நபார்டு வங்கியுடன் மொபைல் ஏ.டி.எம். செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் 34.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் ரூ.6,998.93 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4.5 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 47 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 32,110 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்

கடந்த ஆண்டு மட்டும் 5,754 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக கிடங்குகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக இதுவரை 15,726 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15,583 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 140 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது

ரேஷன் கடை பெயர் நியாய விலைக்கடை. அநியாயமாக அதில் எந்த பணியும் செய்யக்கூடாது. ரேஷன் கடைகளில் சோப்பு, சீப்பு, கண்ணாடி என விரும்பும் பொருள் இருந்தால் வாங்கட்டும். ஆனால், டார்க்கெட் கொடுப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். அதுபோன்று எந்த கட்டாயமும் இல்லை. மக்கள் விரும்பும் பொருட்களை மக்கள் வாங்கலாம். விருப்பமில்லை என்றால் வாங்கத்தேவையில்லை. ரேஷன் அல்லாத பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்களை எக்காரணத்தை கொண்டும் கட்டாயப்படுத்தக்கூடாது. ஆய்வு என்ற பெயரில் அபராதம் விதிப்பதாக கூறுகின்றனர். எந்தளவிற்கு தரமான ஆய்வு என்பதுதான் முக்கியம். ஆய்வின் தரத்தை உயர்த்தி எண்ணிக்கையை குறைக்க உள்ளோம். ஆய்வு செய்யும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது அபராதம் விதிப்பதை தவிர்த்து, அவர்களுக்கான பாதுகாப்பை கூறவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story