3 பேரை கடித்த குதிரையை அடித்து கொன்ற பொதுமக்கள் கடலூர் சில்வர் பீச்சில் பரபரப்பு


3 பேரை கடித்த குதிரையை அடித்து கொன்ற பொதுமக்கள் கடலூர் சில்வர் பீச்சில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் சில்வர் பீச்சில் 3 பேரை கடித்த குதிரையை பொதுமக்கள் அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர்

சென்னை சூளைமேடு பகுதியில் பள்ளிக்குச் சென்று தாயுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த 9 வயது சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடலூரில் குதிரை கடித்ததில் மாணவன் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் லோகேஷ்வரன் (வயது 15). இவன் கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும், லோகேஷ்வரன் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளான். அப்போது அவன், சில்வர் பீச்சில் சவாரி செல்லும் குதிரையின் அருகில் சென்றபோது, திடீரென அந்த குதிரை லோகேஷ்வரனை கடித்துள்ளது.

குதிரையை அடித்துக் கொன்ற மக்கள்

இதில் பதறிய அவன் அங்கிருந்து ஓட தொடங்கினான். இருப்பினும் அந்த குதிரை விடாமல் துரத்திச் சென்று அவனை கடித்ததுடன், காலாலும் உதைத்தது. மேலும் சில்வர் பீச்சில் பஜ்ஜி கடை வைத்திருந்த தேவனாம்பட்டினத்தை சேர்ந்த பத்மாவதி (65), சொக்கலிங்க தெருவை சோ்ந்த ரவி மனைவி தேன்மொழி ஆகியோரையும் குதிரை கடித்தது. இதைபார்த்த பொதுமக்கள் அந்த குதிரையை கல் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த குதிரை பரிதாபமாக செத்தது.

3 பேருக்கு சிகிச்சை

இதற்கிடையே குதிரை கடித்ததில் காயமடைந்த லோகேஷ்வரன் உள்பட 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து இதுகுறித்து குதிரையின் உரிமையாளரான கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் தெருவை சேர்ந்த ஆண்டவர் மகன் வினோத்(35) மீது தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story