பொதுமக்கள் 'திடீர்' சாலை மறியல்
நெல்லை மேலப்பாளையத்தில் பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
நெல்லை, மேலப்பாளையத்தின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்துக்களை ஏற்படுத்தும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் பிடித்து கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மேலப்பாளையம் பகுதி மக்கள் மற்றும் ஆக்கிரமிப்பு இல்லாத மேலப்பாளையம் என்ற அமைப்பினர் கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த இந்த பகுதி மக்கள் மற்றும் ஆக்கிரமிப்பு இல்லாத மேலப்பாளையம் என்ற அமைப்பினரும் நேற்று மாலையில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் குதா முஹம்மது தலைமையில் திடீரென ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மீரான், செய்யது அப்துல் காதர், வக்கீல் அப்துல் ஜப்பார், மக்தும் கனி, மூலன் அன்வர், ராயல் காதர், மீரான் முகம்மது, பாபு, சுலைமான் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்ஷா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாடுகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.