திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் பொதுமக்கள்
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தாலுகா அலுவலக வளாகம்
திருவண்ணாமலை அண்ணாசாலையில் பெரியார் சிலை அருகில் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் உள்ள வளாகத்திற்குள் கிராம நிர்வாக அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், சார் கருவூல அலுவலகம், மாவட்ட குழந்தை நல அலுவலகம், கேபிள் டி.வி. தாசில்தார் அலுவலகம், உழவர் சந்தை, கல்லூரி மாணவிகளுக்கான விடுதிகள், வட்ட வழங்கல் அலுவலகம் என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதனால் அங்கு வேலை நாட்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இதில் குறிப்பாக சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் அந்த அலுவலக வளாகம் காலை முதல் இரவு வரை எப்போது மக்கள் நடமாட்டத்துடனே காணப்படும். ஆனால் அங்கு பொதுமக்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. தாலுகா அலுவலக வளாகத்தில் பொது கழிப்பறை உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளது. தண்ணீர் வசதியில்லாமல் இந்த பொது கழிப்பறை உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அசுத்தமாக காணப்படுகிறது.
குடிநீர் வசதி இல்லை
மேலும் அங்கு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதியில்லாமல் உள்ளது. ஏதாவது நிகழ்ச்சி நடைபெற்றால் மட்டுமே தாசில்தார் அலுவலகம் அருகில் பெரிய சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். மற்ற நாட்களில் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிக்கூட அங்கு இருக்காது.
தாலுகா அலுவலகத்திற்கு வரும் ஏழை, எளிய மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சார் கருவூல அலுவலகத்தில் இருந்து சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் போதிய சாலை வசதி இல்லாததால் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையினால் தற்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கின்றது. சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் அதனை கண்டு கொள்ளாமலேயே உள்ளனர்.
சேறும், சகதியுமாக உள்ள அந்த இடத்தில் முரம்பு மண்ணை கொட்டியாவது அந்த இடத்தை சரி செய்யலாமே என்று ஆதக்கப்படுகின்றனர். இங்கு சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் கூட ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அங்கு சாலை அமைத்து தர அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தாலுகா அலுவலகம் பொதுமக்கள் வந்து செல்லும் இடம் போல் இல்லாமல் குப்பை கூளமாகவே காட்சி அளிக்கின்றது. விடுதிகளின் அருகில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி காணப்படுகிறது.
எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.