பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர் பழுதால் பொதுமக்கள் அவதி
சிவகாசி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர் பழுதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சிவகாசி,
சிவகாசி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர் பழுதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
பத்திரப்பதிவு அலுவலகம்
சிவகாசி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேற்று ஏராளமான நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை பதிவு செய்ய வந்திருந்தனர். காலை 10 மணிக்கு வழக்கம்போல் பணிகள் தொடங்கியன. பணி தொடங்கிய சிறிது நேரத்தில் சர்வர் பழுது ஏற்பட்டது.
இதனால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்தனர்.
பின்னர் பத்திரம் பதிவு செய்ய வந்தவர்களை அதிகாரிகளும், அலுவலர்களும் அலுவலகத்துக்கு வெளியே காத்திருக்கும்படி வலியுறுத்தினர். சுமார் 5 மணி நேரம் இந்த பாதிப்பு இருந்தது.
சர்வர் பழுது
இதனால் நேற்று பத்திரப்பதிவு செய்ய வந்த 100 பேரில் 10 பேருக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் என்பவர் கூறியதாவது:-
பத்திரப்பதிவு செய்வதில் கடந்த சில நாட்களாக சர்வர் பழுது தொடர்ந்து இருந்து வருகிறது. தினமும் 50-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிய வேண்டிய நிலையில் அதிகபட்சமாக 10 பத்திரங்கள் மட்டும் தான் பதிவு செய்யப்படுகிறது.
அலைக்கழிக்கப்படும் நிலை
சர்வர் பழுதே இதற்கு காரணம் ஆகும். இதனால் பத்திரம் பதிவு செய்ய வரும் நபர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடையும் நிலை தொடர்கிறது. கடந்த மாதம் சில நாட்கள் இப்படி சர்வர் பிரச்சினை இருந்தது.
இதனால் அரசுக்கு வர வேண்டிய வருமானத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்களும் திரும்ப, திரும்ப அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்கிறது. ஆதலால் சர்வர் பிரச்சினையை நிரந்தரமாக சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.