சாராய விற்பனையை ஒழிக்க பொதுமக்கள்முழு ஒத்துழைப்பு தர வேண்டும்


தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாராய விற்பனையை ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு நிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

சாராய விற்பனையை ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு நிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில் குத்தாலம் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் பொதுமக்களுக்கு சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் குத்தாலம் தாசில்தார் சரவணன், குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். மேலும் சாராயத்தால் ஏற்படும் தீமைகள், குடும்பங்களின் சீரழிவு, பொருளாதார சீர்கேடு ஆகியவை குறித்தும் எடுத்துக்கூறினர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் கிராமப்புறங்களில் சாராய விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் கூறினர். அப்போது குத்தாலம் மண்டல துணை தாசில்தார் ராஜன், அசிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி எழிலன், கிராம நிர்வாக அதிகாரி சாமிநாதன், ஊராட்சி செயலர் மாரியப்பன் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கொள்ளிடம்

இதேபோல் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் துறை (சீர்காழி உட்கோட்டம்), சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் ஆணைக்காரன் சத்திரம் போலீஸ் நிலையம் இணைந்து சாராயம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமை தாங்கினார். ஆணைக்காரன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வரவேற்றார்.

சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா கலந்து கொண்டு பேசுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக கடந்த 3 நாட்களில் 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6 ஆயிரத்து 935 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

முழு ஒத்துழைப்பு

சாராயத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒற்றுமையாக இருந்து முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். இதில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (பொறுப்பு) துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், வீரமணி மற்றும் போலீசார், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷா பரிசு பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.


Next Story