நீச்சல் குளங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு


நீச்சல் குளங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு
x

நீச்சல் குளங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

விருதுநகர்

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீச்சல் குளங்களிலும் உள்ள நீச்சல் பயிற்றுனர்கள், பயிற்றுனருக்கான கல்வி தகுதி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். நீச்சல் குளத்தின் வெளிப்புறத்தில் குறைந்தபட்சம் சான்றிதழ் பெற்ற 2 உயிர் காப்பாளர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். பெண்களுக்கு பெண் பயிற்றுனர்கள் மூலம் மட்டுமே பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

நீச்சல் குளத்தில் உயிர் காப்பாளர்கள் உயிர் காப்பு கவச ஆடை பணிநேரத்தில் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் பாதுகாப்பு பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் நீரின் நிறம் மாறாமல் இருக்க தகுந்த குளோரின் அளவு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி ஏற்படாத வண்ணம் சரியான அளவு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

நீச்சல் குளத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கும் தனித்தனியாக பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். தொற்றுநோய் பரவாமல் இருக்க கிருமி நாசினி இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி அனைத்தும் நீச்சல் குளங்களிலும் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தை பயன்படுத்துவோரின் விவரங்கள் பதிவேடு மூலம் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட வேண்டும். 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் தகுந்த துணையோடு வந்து உள்ளார்களா என்பதை உயிர் காப்பாளர் மற்றும் நீச்சல் பயிற்றுனர் கண்காணிக்க வேண்டும். நீச்சல் பயிற்றுனர் அல்லது உயிர் காப்பாளர் நீச்சல் குளத்தை பயன்படுத்த வருபவர்கள் மது அருந்தி வந்துள்ளார்களா என்பதையும் பரிசோதித்து பின்னர் நீச்சல் குளத்தில் அனுமதிக்க வேண்டும். நீச்சல் குளத்தில் செல்பி எடுக்க அனுமதி இல்லை. நீச்சல் விதிமுறைகள் சம்பந்தமான அறிவிப்பு பலகை அனைத்து நீச்சல் குளங்களிலும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.



Next Story