பஸ் மோதியதில் மின்விளக்கு கம்பம் முறிந்து விழுந்து புது மாப்பிள்ளை சாவு
நெல்லையில் நேற்று பஸ் மோதியதில் மின்விளக்கு கம்பம் முறிந்து விழுந்து புதுமாப்பிள்ளை பலியானார்.
நெல்லையில் நேற்று பஸ் மோதியதில் மின்விளக்கு கம்பம் முறிந்து விழுந்து புதுமாப்பிள்ளை பலியானார்.
புதுமாப்பிள்ளை
நெல்லை வண்ணார்பேட்டையில் இருந்து பாளையங்கோட்டை பஸ்நிலையம் நோக்கி நேற்று பிற்பகலில் தனியார் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவே நின்றிருந்த மாநகராட்சி மின்விளக்கு கம்பம் மீது மோதியது. இதில் மின்கம்பம் அடியோடு முறிந்து கீழே சாய்ந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சீனிவாசன் (வயது 29) என்பவர் மீது விழுந்து காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சீனிவாசன் இறந்தார். இந்த விபத்து குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த சீனிவாசனுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு விபத்து
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ஹரிஹர பிரசாத். இவரின் மனைவி தங்கம் (29). நேற்று தங்கம் தனது 2 வயது மகனுடன் பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்த தனது உறவினரான ராமகிருஷ்ணன் (45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் துணி எடுக்க கடைக்கு சென்றார். பாளையங்கோட்டை சித்தா மருத்துவ கல்லூரி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்களுக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.