பொதுமக்களை சரமாரியாக தாக்கிய புதுச்சேரி வாலிபர்கள்
செம்பனார்கோவில் அருகே பழம் வாங்கியபோது ஏற்பட்ட தகராறில் பொதுமக்களை புதுச்சேரி வாலிபர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவத்தால் செம்பனார்கோவில் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி:
செம்பனார்கோவில் அருகே பழம் வாங்கியபோது ஏற்பட்ட தகராறில் பொதுமக்களை புதுச்சேரி வாலிபர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவத்தால் செம்பனார்கோவில் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
ஆணழகன் போட்டி
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடந்த ஆணழகன் போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த 18 வாலிபர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒரு வேனில் ஆக்கூர் வழியாக புதுச்சேரிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கருவிழுந்தநாதபுரம் பகுதியில் வேனை நிறுத்தி அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வாலிபர்கள் திராட்சைபழம் வாங்கினர். அப்போது விலை அதிகமாக உள்ளது என கூறி கடை உரிமையாளரிடம் தகராறு செய்து அவரை தாக்கியதுடன், கடையையும் சேதப்படுத்தி உள்ளனர்.
தாக்குதல்
இதை தொடர்ந்து அவர்கள் வேனில் ஏறி புதுச்சேரிக்கு சென்றனர். இதை பார்த்்த அந்த பகுதி பொதுமக்கள் புதுச்சேரி வாலிபர்கள் சென்ற வேனை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர். வேனில் சென்ற வாலிபர்கள் சாலையில் நடந்து சென்றவர்களையும், மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களையும் சரமாரியாக தாக்கியடியே சென்றனர்.
சட்டநாதபுரம் கைகாட்டியில் சாலையோரம் நின்றவர்களையும் கட்டையால் சரமாரியாக தாக்கினர். சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீது தாங்கள் சென்ற வேனை விட்டு மோதினர்.
ேபாலீஸ் நிலையத்துக்குள் புகுந்தனர்
இந்த நிலையில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் தங்களை விரட்டி வருவதை அறிந்த டிரைவர் வேனை சீர்காழி போலீஸ் நிலையத்திற்குள் ஓட்டிச்சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் வேனை பின் தொடர்ந்து வந்த பொதுமக்களும் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தனர்.
இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து காப்பாற்ற வேனில் வந்தவர்களை போலீசார் தங்களது பாதுகாப்பில் வைத்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேனில் வந்த புதுச்சேரி வாலிபர்கள் கண்ணில் பட்ட பொதுமக்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.