புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் திடீர் ஆய்வு


புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 5:36 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க குழுவினர் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.

சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு

கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையிலான தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் நேற்று 2-வது நாளாக தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் எம்.எல்.ஏக்கள் எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), ம.சிந்தனைசெல்வன் (காட்டுமன்னார் கோவில்), ச.சிவகுமார் (மயிலம்), சேவூர் எஸ்.ராமச்சந்திரன் (ஆரணி), கோ.தளபதி (மதுரை வடக்கு), வி.பி.நாகைமாலி (கீழ்வேளுர்), இ.பரந்தாமன் (எழும்பூர்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்) இடம் பெற்றிருந்தனர்.

நோயாளிகளிடம் குறைகேட்பு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், செவிலியர்களிடம் நோயாளிகள் வருகை, மருத்துவ வசதி, மருந்துகள் இருப்பு போன்றவை குறித்து விசாரித்தனர். மேலும் ஆரம்ப சுகாதார நிைலயத்திற்கு வசதிகள் தேவை குறித்து கேட்டறிந்தனர். அப்போது, அங்கு வரும் நோயாளிகளுக்கு இன்முகத்துடன் உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர். அங்கு வந்திருந்த நோயாளிகளிடமும் குழுவினர் குறைகள் கேட்டனர். பின்னர் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ஆலந்தா அணைக்கட்டு ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

பின்னர் புதுக்கோட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் கலந்து கொண்டு, 6 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், ஒரு பெண்ணுக்கு குழந்தை நலப்பெட்டகத்தையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலர் சுப்பிரமணியம், தாசில்தார்கள் பிரபாகரன் (தூத்துக்குடி), சிவக்குமார் (ஸ்ரீவைகுண்டம்) உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story