புதுக்கோட்டை-ஸ்ரீவைகுண்டம் சாலையைஇருவழிச்சாலையாக மாற்ற கோரிக்கை


தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை-ஸ்ரீவைகுண்டம் சாலையை இருவழிச்சாலையாக மாற்ற கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

புதுக்கோட்டை-ஸ்ரீவைகுண்டம் இடையேயான சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

குறைதீர்க்கும்நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

வடமாநில தொழிலாளர்கள்

மத்திய பிரதேச மாநில தொழிலாளர்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் காதர் முகைதீன், பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், எட்டயபுரம் அருகே கடந்த 30-ம் தேதி நடந்த சாலை விபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் காயமடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். உயிரிழந்த நபரின் உடல் தூத்துக்குடி பொது மையவாடியில் தகனம் செய்யப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிலர் குணமடைந்துவிட்டனர். மேலும், பலர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். தொழிலுக்காக வந்த இடத்தில் விபத்தில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மரணமடைந்த நபருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிலாளர்கள் தங்குவதற்கு இடவசதியும், உணவு வசதியும், மேல் சிகிச்சைக்கு பிறகு சொந்த ஊருக்கு செல்வதற்கான பயண ஏற்பாடுகளையும் செய்து தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.

இருவழிச்சாலை

காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் வே.பா.மா.மச்சேந்திரன் அளித்த மனுவில், புதுக்கோட்டை- ஸ்ரீவைகுண்டம் இடையேயான கூட்டாம்புளி, சிவத்தையாபுரம், சாயர்புரம், பண்ணைவிளை, சிவகளை வழியாக செல்லும் சாலையை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் இருவழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கீழமங்கலத்தை சேர்ந்த சில பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், அரசு சார்பில் எங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருவாய் ஆய்வாளர் தெரிவித்து உள்ளார். இந்த இடத்தை விட்டால் எங்களுக்கு வேறு இடம் ஏதும் இல்லை. எனவே, அந்த இலவச வீட்டுமனை பட்டா ரத்தாகாமல் எங்களுக்கே மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆக்கிரமிப்பு

ஏரல் அருகே உள்ள சிவகளை பரும்பு கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், சிவகளை பரும்பு கிராமத்தில் 450 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பொது இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து முள்வேலி போட்டு உள்ளார். அந்த இடத்தை மீட்டு, அதில் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மக்கள் சமூக பாதுகாப்பு சங்க மாநகர மாவட்ட தலைவி சசிகலா கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், பெருங்குளம் மாயகூத்தர் பெருமாள் கோவிலில் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய அன்னதானத்தை வழங்காமல் மதிய அன்னதான திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story