தாய்லாந்து நாட்டில் வேலைக்கு சென்ற புதுக்கோட்டை வாலிபர் தவிப்பு


தாய்லாந்து நாட்டில் வேலைக்கு சென்ற புதுக்கோட்டை வாலிபர் தவிப்பு
x

தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட வாலிபர் தவித்து வருகிறார். அவரை மீட்க கோரி மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை

பட்டதாரி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே செய்யானம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 31). எம்.பி.ஏ. பட்டதாரியான இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 3 வயதில் சாய் துருவேஷ் என்ற மகன் உள்ளான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வக்குமார் சிவகாசியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கொரோனா ஊரடங்கிற்கு பின் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பினார். இதற்கிடையில் மகன் சாய் துருவேஷ்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். இதில் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றில் அதிகம் செலவானது.

தாய்லாந்தில் வேலை

இந்த நிலையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சம்பாதிக்க செல்வக்குமார் எண்ணினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த ஒரு ஏஜெண்டு மூலம் துபாய் நாட்டில் கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி வேலை இருப்பதும், மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளம் எனவும் தெரிந்தது. இந்த தகவல் மூலம் ஏஜெண்டிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம் கட்டிய பின் கடந்த மே மாதம் 31-ந் தேதி செல்வக்குமார் துபாய் சென்றார்.

பின்னர் அங்கிருந்து தாய்லாந்து நாட்டிற்கு அவரை அந்நிறுவன ஏஜெண்டுகள் அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து அவர் படகு மூலம் மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு கணினியில் முறைகேடான வேலையை பார்க்க கூறியிருக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த செல்வக்குமாரை அங்குள்ளவர்கள் சித்ரவதை செய்துள்ளனர். இதனால் தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அந்த கும்பலிடம் செல்வக்குமார் கெஞ்சினார்.

ரூ.3½ லட்சம் பணம்...

இதையடுத்து அவரிடம் ரூ.3 லட்சத்து 58 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர். மேலும் அதனை உடனடியாக கொடுத்தால் விடுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் செல்வக்குமார் தனது மனைவி ரம்யாவை தொடர்பு கொண்டு பேசி நிலைமையை எடுத்துக்கூறியிருக்கிறார். இதனால் பதறிப்போன ரம்யா செய்வதறியாமல் திகைத்து நகைகளை அடகு வைத்தும், கடனை வாங்கியும் பணத்தை ஏற்பாடு செய்து அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் பணம் செலுத்தி உள்ளார்.

பணத்தை பெற்ற பின் செல்வக்குமாரை படகு மூலம் தாய்லாந்துக்கு அழைத்து சென்று விடுவித்துள்ளனர். அவருடன் கேரள மாநிலத்தை சேர்ந்த 7 பேரும் பயணம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து அவர்களை பாங்காக் அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மனைவி கண்ணீர்

இதற்கிடையில் ரம்யாவிடம் செல்வக்குமார் அவ்வப்போது வாட்ஸ்-அப்பில் வீடியோ அழைப்பில் பேசியிருக்கிறார். சமீபத்திலும் அவர் பேசியிருக்கிறார். இந்த நிலையில் தனது கணவரை மீட்க கோரி ரம்யா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து 'தினத்தந்தி' நிருபரிடம் அவர் கூறுகையில், ''எனது கணவர் அங்கு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வப்போது வீடியோ காலில் பேசுவார். அவருக்கும் எங்கு அடைத்து வைத்துள்ளனர் என்று தெரியவில்லை. அங்குள்ள அரசா? அல்லது வேலைக்கு அழைத்து சென்ற தனியார் நிறுவனத்தினரா? அடைத்து வைத்துள்ளனர் என தெரியவில்லை. எனது கணவரை சொந்த ஊருக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் அங்கிருந்து 13 பேர் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அதுபோல எனது கணவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் எனது கணவருக்கு ஏற்பட்ட கொடுமையின் காரணமாக அவர்கள் கேட்ட பணத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். இருப்பினும் 2 மாதங்களுக்கு மேல் ஆனதால் எங்களுக்கு பயமாக உள்ளது. எனது கணவர் அங்கு எப்படி இருக்கிறாரோ? அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கண்ணீர் மல்க கூறினார்.


Next Story