புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்


புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் வரலாற்று சிறப்புடைய புகழிமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவீன சிற்ப சாஸ்திரமுறைப்படி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேக விழா கடந்த 23-ந்தேதி இரவு கிராமசாந்தி பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ந்தேதி காலை புகழிமலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவிலில் விநாயகர் வழிபாடு, கணபதி யோகம் நடைபெற்றது. பின்னர் வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து, யானை, குதிரை, காளை, ஒட்டகம் ஆகியவை முன்னோக்கி செல்ல பக்தர்கள் ஊர்வலமாக புனித நீரை எடுத்து கொண்டு புகழிமலைக்கு வந்தனர்.

பின்னர் புகழிமலை அடிவாரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் உச்சிஷ்ட மகா கணபதி, மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேஷ்வரர், விஷ்ணு, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர், நவக்கிரகங்கள், இடும்பன், மலைக்காவலன், கன்னிமார், பாதவிநாயகர் ஆகிய உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை மகா வாஸ்து சாந்தி பூஜை, பூமிதேவி வழிபாடு நடந்தது. பின்னர் 25-ந்தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

26-ந்தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், அனைத்து கோபுரங்களுக்கும் கண்திறப்பு மற்றும் கலசங்கள் வைத்தல், மூலஸ்தானம் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் எண்வகை அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணியளவில் மங்கள இசையும், திருமுறை பாராயணமும், விநாயகர் வழிபாடும், நான்காம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன தொடர்ந்து மங்கள மகா பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மலை அடிவாரத்தில் இருந்து ஆறுமுகனின் அருள்சக்தி கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 9.15 மணியளவில் வாத்திய இசை முழங்க, வானவெடிகள் ஒலிக்க பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் திருச்சுற்று தெய்வங்களின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

அன்னதானம்

பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை காண்பதற்காக கோவில் மலையை சுற்றியும் மற்றும் கோவிலை சுற்றியுள்ள மாடி வீடுகளிலும் ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை மலை அடிவாரம் மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரைகள் மூலம் பக்தர்கள் கண்டுகளித்தனர். மேலும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

கும்பாபிஷேக விழாவில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, புகழூர் நகராட்சித் தலைவரும், கோவில் திருப்பணிக்குழு தலைவருமான சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன், புகழூர் நகராட்சி கமிஷனர் கனிராஜ், தோட்டக்குறிச்சி பேரூராட்சித்தலைவர் ரூபாமுரளி ராஜா, துணைத்தலைவர் சதீஷ், செயல் அலுவலர் ரமேஷ் ,முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அண்ணாவேலு, காமாட்சி மஹால் வக்கீல் சிதம்பரம், குமரன் குடில் கார்த்திகேயன், ஆல்வின் டிரான்ஸ்போர்ட் சோலை.அருள், கொங்கு டிராவல்ஸ் கொங்குவேலு என்கிற பாலகிருஷ்ணன், வைபவ் பஜாஜ் பாலு மகேந்திரா.

நவலடி குணா, நாவலடி கேஸ் ரமேஷ்குமார், வேட்டமங்கலம் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியன், கோம்புப்பாளையம் ஊராட்சித்தலைவர் பசுபதி, திருக்காடுதுறை ஊராட்சி தலைவர் அசோக்குமார், நன்செய் புகழூர் ஊராட்சித்தலைவர் மதிவாணன், வேடமங்கலம் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், புகழூர் செய்தித்தாள் காகித ஆலை நிறுவன முதன்மை பொது மேலாளர் (வனத்தோட்டம் மற்றும் ஆராய்ச்சி) சீனிவாசன், முதன்மை பொது மேலாளர் (திட்டம் மற்றும் திட்டம் ஒருங்கிணைப்பு) வரதராஜன், பொதுமேலாளர் (மனித வளம்) கலைச்செல்வன், புகழூர் நகராட்சி கவுன்சிலர்கள், புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் திருப்பணி குழுவினர், விழா குழுவினர், அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் நந்தகுமார், புகழூர் நகராட்சி தலைவரும், கோவில் திருப்பணி குழு தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் விழா குழுவினர், அனைத்து ஊர் கொத்துக்காரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் தலைமையில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.


Next Story