பொது இடங்களில் மது அருந்தும் மதுப்பிரியர்கள்


பொது இடங்களில் மது அருந்தும் மதுப்பிரியர்கள்
x
திருப்பூர்

போடிப்பட்டி:

பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தும் மதுப்பிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கவுரவ அடையாளம்

 போதை என்பது பல குடும்பத்தலைவர்களின் பாதையை மாற்றி அவர்கள் குடும்பத்தை தெருவில் நிறுத்தும் நிலை உருவாக்குகிறது. போதையால் பாதை மாறிய பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. ஆனாலும் மது அருந்துவதை கவுரவ அடையாளமாகக் கருதும் மாயையில் பலரும் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் சமீப காலங்களாக பொது வெளியில் கூச்சமில்லாமல் அமர்ந்து மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.

 இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

இன்றைய நிலையில் திரும்பிய திசையெல்லாம் மதுபாட்டில்கள் என்று சொல்லுமளவுக்கு ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. நீர்நிலைகளின் கரைகள், வயல் வெளிகள், சாலையோரங்கள், பஸ் நிறுத்தம், கிணற்று மேடு என எந்த இடத்தையும் குடிமகன்கள் விட்டு வைப்பதில்லை. சில பகுதிகளில் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து மது அருந்தும் அவலமும் அரங்கேறுகிறது.

மன ரீதியான பாதிப்பு

 தற்போது உடுமலை பகுதியில் கோயமுத்தூர் மத்திய கூட்டுறவு வங்கிக்கு எதிரில் ஒன்று, ரயில் நிலையம், தினசரி சந்தை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அமைந்துள்ள சாலையில் ஒன்று, பஸ் நிலையத்திற்கு அருகில் ஒன்று என அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளது. டாஸ்மாக் கடை திறப்புக்காக ஆவலுடன் காத்திருக்கும் மதுப்பிரியர்கள் சிலர் கடைக்கு முன்பாகவே பாட்டிலைத் திறந்து குடிக்கின்றனர்.

 ஒருசிலர் மறைவிடம் தேடி அருகிலுள்ள பள்ளி வளாகம், நகராட்சி பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஒதுங்குகின்றனர். ஆனால் பலரும் சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் அந்த பகுதி வழியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை பார்க்கும் சிறுவர், சிறுமியர் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.

தீர்வுதான் என்ன?

 மதுப்பிரியர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு காது கூசும் வார்த்தைகளைப் பேசும் போதும், ஆடை கலைந்து அலங்கோலமாகக் கிடக்கும் போதும் தவிர்க்க முடியாத நிலையில் அந்த வழியாக செல்லும் பெண்கள் கூனிக் குறுகிப் போகிறார்கள். மேலும் அருகிலுள்ள வணிக நிறுவனங்கள் வியாபாரம் செய்ய முடியாமல் இழப்பை சந்திக்கின்றனர்.

 அத்துடன் அருகிலுள்ள வீட்டிலுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளேயே முடங்கி விடுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி வீட்டு படிக்கட்டுகளிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

 இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக டாஸ்மாக் கடைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடம் மாற்ற வேண்டும். தற்காலிக தீர்வாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரங்களில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல கிராமப்புறங்களில் நீர் நிலைகள், வயல்வெளிகள் உள்ளிட்ட பகுதிகளைப் பாழாக்கும் குடிமகன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.


Next Story