பருப்பு வகைகளின் விற்பனை, இருப்பு விவரங்களை சேகரிக்க மத்திய அரசு நடவடிக்கை
மத்திய அரசின் நுகர்வோர் துறை, மாநிலங்களில் பருப்பு வகைகளின் இருப்பு, விற்பனை மற்றும் உற்பத்தி விவரங்கள் குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
மத்திய அரசின் நுகர்வோர் துறை, மாநிலங்களில் பருப்பு வகைகளின் இருப்பு, விற்பனை மற்றும் உற்பத்தி விவரங்கள் குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இது பற்றிய முழு விவரங்களை சேகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளதாக வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-
கலந்தாய்வு
மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்த நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த பருப்பு இறக்குமதிக்கு 2024 மார்ச் வரை பல்வேறு சலுகைகளை அறிவித்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி பருப்பு உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பருப்பு இருப்பு விவரங்களை மாதந்தோறும் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து மத்திய நுகர்வோர் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில வழங்கல் துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
உயர் அதிகாரிகள்
அப்போது மாநிலங்களில் பருப்பு விற்பனை உற்பத்தி மற்றும் இருப்பு தொடர்பான விவரங்களை கேட்டறிந்தவுடன் இது பற்றி மாநில வழங்கல் துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு உரிமம் பெற்றவர்கள் சரக்கு சேவை வரி செலுத்துபவர்கள் உள்ளிட்டோரிடம் முழு விவரங்களை சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பருப்பு உற்பத்தி, விற்பனை மற்றும் இருப்பு ஆகியவை மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்த நிலையில் இது குறித்து முறையாக ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மத்திய அரசு நுகர்வோர் துறையை சேர்ந்த 12 உயர் அதிகாரிகளை மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பருப்பு விற்பனை உற்பத்தி மற்றும் இருப்பு பற்றிய முழு விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் நோக்கமே பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.