கஞ்சா வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை-புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


கஞ்சா வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை-புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x

கஞ்சா வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை சிறப்பு கோா்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

கஞ்சா பொட்டலங்கள்

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி இரவு சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற ஒரு காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் 33 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மேலும் காரில் இருந்த 4 பேர் தப்பியோடிவிட்டனர். ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கஞ்சாவையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனியை சேர்ந்த விஜய் (வயது 23), தஞ்சாவூரை சேர்ந்த ரஞ்சித்குமார் (25), காரைக்குடி தட்டாம்புத்தூரை சேர்ந்த சண்முகவேல் (36) ஆகியோரை கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை தண்டனை

இந்த நிலையில் சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு சிவகங்கை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் காரின் உரிமையாளரும், கஞ்சாவை விற்க கொண்டு வந்ததில் மூலக்காரணமான புதுக்கோட்டையை சேர்ந்த மற்றொரு விஜய் (32), தேவக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார் (35) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் உள்ள அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் புதுக்கோட்டையை சேர்ந்த விஜய்க்கு 2 பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும், இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

3 பேர் விடுதலை

இதேபோல சண்முகவேலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் முத்துக்குமார், தேனி விஜய், ரஞ்சித்குமார் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் அரசு வக்கீல் எம்.பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட விஜய், சண்முகவேல் ஆகியோரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.


Next Story