குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்
குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று துரை வைகோ கூறினார்.
அன்னவாசல் அருகே இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்திற்கு நேரில் சென்ற ம.தி.மு.க.வின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ அந்தப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது மிகவும் இழிவான செயல். கண்டிக்கத்தக்க கூடியது. விஞ்ஞான உலகில் இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற செயல் தமிழகத்தில் வேறு எங்கும் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசுவது எதிர்கால அரசியலுக்கும் நல்லது இல்லை. அவரது இயக்கத்திற்கும் இது நல்லது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.