புஞ்சைபுளியம்பட்டி நேரு நகரில் தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் 18-ம் படி ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்


புஞ்சைபுளியம்பட்டி நேரு நகரில்  தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் 18-ம் படி ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 18 Dec 2022 1:00 AM IST (Updated: 18 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பக்தர்கள் சாமி தரிசனம்

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி நேரு நகரில் உள்ள தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் 18-ம் படி ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி, நேரு நகரில் பிரசித்தி பெற்ற தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் சபரிமலையில் இருப்பது போன்று 18 படிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை அன்று 18-ம் படி திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது ஆண், பெண் பக்தர்கள் இருபாலரும் 18-ம் படி ஏறி சாமியை தரிசனம் செய்யலாம்.

18-ம் படி திறப்பு

அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி கோவிலில் நேற்று 18-ம் படி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் கணபதி ஹோமத்துடன் அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 108 சங்காபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 7 மணி அளவில் 18-ம் படி திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது படிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு திறக்கப்பட்டது. இதில் திரளான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று 18 படி ஏறி சாமியை தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

மாலையில் சாமிக்கு அலங்கார பூஜையும், இதையடுத்து இரவு 7 மணிக்கு 18 படிகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு படி பூஜையும் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்பசாமியை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story