மாணவர்கள் வாந்தி-மயக்கம் எதிரொலி:அனுமதியின்றி இயங்கிய உணவு விடுதிக்கு 'சீல்'


மாணவர்கள் வாந்தி-மயக்கம் எதிரொலி:அனுமதியின்றி இயங்கிய உணவு விடுதிக்கு சீல்
x

கன்னியாகுமரியில் காலை உணவு சாப்பிட்ட 43 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கிய சம்பவத்தை தொடர்ந்து அனுமதியின்றி இயங்கிய உணவு விடுதிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் காலை உணவு சாப்பிட்ட 43 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கிய சம்பவத்தை தொடர்ந்து அனுமதியின்றி இயங்கிய உணவு விடுதிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

கடற்கரையில் தூய்மை பணி

மத்திய அரசு திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் காலையில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். இந்த பணியில் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 3 பள்ளிகளை சேர்ந்த தேசிய மாணவர் படை பிரிவில் உள்ள 150 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு காலை உணவாக இட்லி, சாம்பார், சட்னி, வடை வழங்கப்பட்டது. மேலும் பாக்கெட்டாக குளிர்பானமும் கொடுக்கப்பட்டது. இதை சாப்பிட்ட கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 43 மாணவ-மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அனைவரும் கொட்டாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 6 மாணவிகள் உள்பட 13 பேர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் உள்பட பலர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

உணவு விடுதிக்கு 'சீல்'

இந்தநிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு உணவு பொட்டலம் தயாரித்து வழங்கிய கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் உரிமம் இன்றி உணவு விடுதி இயங்கி வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அதிகாரிகள் விடுதிக்கு 'சீல்' வைத்தனர்.

மேலும், மாணவ-மாணவிகள் சாப்பிட்ட உணவு வகைகளை அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள நுண்ணறிவு ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் குடிப்பதற்காக பயன்படுத்திய தண்ணீரையும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அனைத்து மாணவ-மாணவிகளும் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story