கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா
x

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா

திருப்பூர்

திருப்பூர்

இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் தர்ணா

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு அதிகம் பெண்கள் விண்ணப்பித்தனர்.

அவினாசி தேவராயம்பாளையம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்கு முன் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரிக்கை வைத்தனர். அவர்கள் அளித்த மனுவில், 'நாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்கள் பெயரில் வீடோ, சொந்த நிலமோ இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. கூலித்தொழிலாளிகளான எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தனர். பின்னர் போலீசார் அங்கு வந்து, தர்ணாவில் ஈடுபட்டவர்களை கலெக்டரிடம் அழைத்துச்சென்று மனு கொடுக்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதிதிராவிடர் நலத்துறை

இதுபோல் தாராபுரம் காமராஜபுரத்தை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், 'நாங்கள் சொந்த வீட்டுமனை இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். ஒரே வீட்டில் 4 குடும்பங்கள் சேர்ந்து வசிக்கும் நிலை உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையில் தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உதவ வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

உடுமலை தாலுகா ராமச்சந்திராபுரம் இலுப்பு நகரம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உதவ வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளனர்.



Next Story