பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர்கள் பாஸ்கரன், வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உதவி ஆணையாளர்கள் ஜஹாங்கிர் பாட்ஷா, வெங்கட்ராமன், சொர்ணலதா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, ராமசாமி, மண்டல தலைவர் ரேவதிபிரபு, கவுன்சிலர்கள் கந்தன், நித்திய பாலையா ஆகியோர் கலந்துகொண்டனர்.
முற்றுகை போராட்டம்
பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகரில் உள்ள அம்பேத்கர் காலனி பொதுமக்கள் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் நேற்று மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100 குடும்பத்தை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தற்போது மாநகராட்சி சார்பில் புதிதாக குடியிருப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் எங்களை தற்காலிகமாக வேறு இடத்திற்கு வசித்து கொள்ள கேட்டுக்கொண்டனர்.
இதற்காக வாடகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வாடகை பணம் தற்போது உள்ள சூழ்நிலைக்கு மிகவும் குறைவாக உள்ளது. பாளையங்கோட்டை மார்க்கெட்டில் புதிதாக கடை அமைப்பதற்காக வியாபாரிகளுக்கு தற்காலிகமாக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் எங்களுக்கும் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும். அதுவரை நாங்கள் வீடுகளை காலிசெய்ய மாட்டோம் என கூறினர்.
ஆட்டோ டிரைவர்கள்
புதிய பஸ் நிலையத்திற்குள் பயணிகளை இறக்கி விட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி ஆட்டோ டிரைவர்கள் கவுன்சிலர் நித்தியபாலையா, சுந்தர் ஆகியோர் தலைமையில் வந்து மனு கொடுத்தனர்.
பாளையங்கோட்டை மண்டலம் 35-வது வார்டில் நவீன நீர்நிலை தேக்க தொட்டி மற்றும் சிறுவர் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்று கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் கோபாலன் மனு கொடுத்துள்ளார்.
கூட்டத்தில் நெல்லை கண்டியபேரி பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவருக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை மேயர் பி.எம்.சரவணன் வழங்கினார்.