கிணற்றுக்குள் விழுந்து 5 நாட்களாக உயிருக்கு போராடிய நாய்க்குட்டி


கிணற்றுக்குள் விழுந்து 5 நாட்களாக உயிருக்கு போராடிய நாய்க்குட்டி
x

குளச்சலில் 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து 5 நாட்களாக உயிருக்கு போராடிய நாய்க்குட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சலில் 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து 5 நாட்களாக உயிருக்கு போராடிய நாய்க்குட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

கிணற்றுக்குள் நாய்க்குட்டி

குளச்சல் பர்னட்டிவிளையை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 50), இவர் அந்த பகுதியில் மாவுமில் நடத்தி வருகிறார். இந்த மில்லின் முன் பகுதியில் ஆபத்தான நிலையில் சுற்று சுவர் இல்லாமல் 40 அடி ஆழ பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த மில்லின் வழியாக சென்ற ஒருவர், கிணற்றுக்குள் நாய்க்குட்டி குரைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மண்சரிவு ஏற்படும் அபாயம்

பின்னர், அவர் நாய்குட்டியின் பரிதாப நிலையை பார்த்து அதை மீட்பதற்காக குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அதிகாரி குணசேகரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாயை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், மாலை நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தது. மேலும், கிணற்றின் உள்ளே மண்சரிவு ஏற்படும் அபாயம் இருந்தது. இதனால், நாய்க்குட்டியை மீட்கும் முயற்சியை தீயணைப்பு வீரர்கள் கைவிட்டனர். அதற்கு உணவு மட்டும் போடப்பட்டது.

உயிருடன் மீட்டனர்

இந்தநிலையில் நேற்று காலையில் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் அந்த கிணற்றுக்கு வந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர் ஒருவர் கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கி நாய்க்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டார்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உலாவிய நாய்க்குட்டி கிணற்றின் அருகில் சென்றபோது திடீரென தவறி உள்ளே விழுந்ததும், அந்த வழியாக யாரும் செல்லாததால் இதை கவனிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் நாய்க்குட்டியை அந்த பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஒருவரிடம் ஒப்படைத்தனர்.


Next Story