சேலம் மாவட்டத்தில் 16,563 டன் நெல் கொள்முதல்-கலெக்டர் கார்மேகம் தகவல்


சேலம் மாவட்டத்தில் 16,563 டன் நெல் கொள்முதல்-கலெக்டர் கார்மேகம் தகவல்
x

சேலம் மாவட்டத்தில் 16,563 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

சேலம்

கலெக்டர் ஆய்வு

சேலம் சீலநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக வட்டார செயல்முறை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 9 வட்ட செயல்முறை கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. அரசின் சிறப்பு திட்டங்களான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரம்ஜான் பண்டிகைக்கு தேவையான அரிசி நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக வினியோகம் செய்யப்படுகிறது.

மேலும் இவற்றின் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான குடிமைப்பொருள் மாதம் ஒன்றுக்கு 16,293 டன் அரிசி, 1,462 டன் சர்க்கரை, 296 டன் கோதுமை, 899 டன் துவரம் பருப்பு, 9,17,708 பாமாயில் பாக்கெட்டுகள் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அவைகள் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் பொது வினியோக திட்டத்தின் கீழ் இயங்கி வரும் 1,541 அங்காடிகளுக்கு அனுப்பி வைத்து சீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

16,563 டன் நெல் கொள்முதல்

சேலம் மாவட்டத்தில் 2021-2022-ம் கொள்முதல் பருவத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 16,563 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 3,451 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். 2021-2022-ம் ஆண்டு பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லை ஒரு நிரந்தர அரவை முகவர் மற்றும் 2 பகுதி நேர அரவை முகவர் நியமனம் செய்து, 3,268 டன் நெல் அரவை செய்யப்பட்டு பொது வினியோக திட்டத்தில் வினியோகிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 2,195 சத்துணவு மற்றும் 2,618 அங்கன்வாடி மையங்களுக்கு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக உணவுப்பொருள் வினியோகம் செய்யப்படுகிறது.

127 டன் சிமெண்டு

வெளிச்சந்தையில் கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசின் மலிவு விலை சிமெண்டு திட்டத்தின் கீழ் ஆகஸ்டு மாதத்தில் 64 பயனாளிகளுக்கு 127 டன் சிமெண்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலம் டவுன், எடப்பாடி, சங்ககிரி மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட்டு நுகர்வோருக்கு தரமான மளிகை மற்றும் அழகு சாதனப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.


Next Story