3¾ லட்சம் செங்கரும்புகள் கொள்முதல்
திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க 3¾ லட்சம் செங்கரும்புகள் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க 3¾ லட்சம் செங்கரும்புகள் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுகரும்பு மற்றும் ரூ.1,000 ஆகிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக வீடுகளுக்கு நேரடியாக சென்று பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ள செங்கரும்புகள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
இன்று முதல் வழங்கப்படுகிறது
திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 702 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு இன்று(திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.
இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பு நேரடியாக கொள்முதல் செய்யும் பணியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கரும்பு கொள்முதலில் முறைகேடுகள் நிகழக் கூடாது. புகார்கள் ஏற்படாமல் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இதை தொடர்ந்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கத்தில் விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொள்முதல் செய்யப்படும் கரும்பு 6½ அடி உயரம் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். புகார்களுக்கு இடமின்றி கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் உள அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் நபோது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
3 லட்சத்து 92 ஆயிரம் கரும்புகள்
பின்னர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது:- திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் 12-ந்தேதி வரை வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கடைகளில் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தேதிகளில் பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் 13-ந்தேதி(வெள்ளிக்கிழமை) பொருட்களை வாங்கி கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரருக்கு வழங்க பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க 3 லட்சத்து 92 ஆயிரம் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
புகார் தெரிவிக்கலாம்
பொங்கல் தொகுப்பு வழங்குவது தொடர்பான புகார்களுக்கு திருவாரூர் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளரை 7338749200 என்ற எண்ணிலும், திருவாரூர் கூட்டுறவு துணைப்பதிவாளரை 7844039202 என்ற எண்ணிலும், மன்னார்குடி கூட்டுறவு துணைப்பதிவாளரை 7338749203 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.