கூடலூர் கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கொள்முதல் விலை ஒரே மாதத்தில் ரூ.15 ஆக குறைவு-விவசாயிகள் கடும் அதிருப்தி


கூடலூர் கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கொள்முதல் விலை ஒரே மாதத்தில் ரூ.15 ஆக குறைவு-விவசாயிகள் கடும் அதிருப்தி
x
தினத்தந்தி 11 May 2023 12:30 AM IST (Updated: 11 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நீலகிரி

கூடலூர்

கூடலூர் சாலீஸ்பரி கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கொள்முதல் விலை ரூ.15 ஆக குறைந்ததால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ரூ.19 ஆக விலை நிர்ணயம்

நீலகிரி மாவட்டத்தின் பிரதானமாக பச்சை தேயிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் பச்சை தேயிலை கொள்முதல் விலை குறைவாக வழங்கப்படுகிறது. இதனால் சிறு விவசாயிகள் பல ஆண்டுகளாக பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதால் தோட்டத் தொழிலாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இதனால் பச்சை தேயிலை கிலோ ரூ.30-க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் உரிய விலை வழங்கப்பட வில்லை. இதன் காரணமாக நாளுக்கு நாள் தேயிலை விவசாயம் நலிவடைந்து வருகிறது. கூடலூர் 2-ம் மைல் பகுதியில் சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உள்ளது. இங்கு சிறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த மார்ச் மாதம் பச்சை தேயிலை கிலோ ரூ.19 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

அதிருப்தி

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் பச்சை தேயிலை கிலோ ரூ.15 ஆக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ.4 குறைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் கேட்டபோது, செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக பச்சை தேயிலை கொள்முதல் விலை குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை வறட்சியால் பச்சை தேயிலை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் தொழிற்சாலைகளுக்கு வரத்து குறைந்து கொள்முதல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மார்ச் மாதம் கிலோவுக்கு ரூ.19 என விலை வழங்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதம் ரூ.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் செலவினம் அதிகரித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story