வண்டாம்பாளை ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்தது
வண்டாம்பாளை ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்தது
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நன்னிலம் அருகே வண்டாம்பாளை ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்தது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ளது வண்டாம்பாளை ஊராட்சி. இந்த ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களுக்காக கடந்த ஆண்டு வண்டாம்பாளை மெயின் ரோட்டில் ரூ.9 லட்சம் செலவிலும், மாரியம்மன் கோவில் தெருவில் ரூ. 7 லட்சம் செலவிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையத்தில் உள்ள எந்திரத்தில் ஒரு ரூபாய் செலுத்தி விட்டு பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிடித்து செல்லலாம் என்ற திட்டத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ஓரிரு நாட்கள் மட்டுமே செயல்பட்டது. பின்னர் 2 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களும் செயல்படாமல் பராமரிப்பின்றி காணப்பட்டது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படாமல் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செயல்பாட்டிற்கு வந்தது
இதுகுறித்த செய்தி படத்துடன் கடந்த 27-ந்தேதி 'தினத்தந்தி'யில் பிரசுரமானது.
இதன் எதிரொலியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர்கள் ஆகியோரின் துரித நடவடிக்கையால் செயல்படாமல் இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து 2 ரூபாய் செலுத்திவிட்டு பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்து செல்கின்றனர். செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.