தூய்மை விழிப்புணர்வு பேரணி
தென்காசியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தென்காசி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் என்ற திட்டத்தை சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தென்காசி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், இதனை அமல்படுத்தும் வகையில் நேற்று காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. நகரசபை தலைவர் சாதிர் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ள செய்ய வேண்டியவை குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்த பேரணி கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்தது. நிகழ்ச்சியில் நகரசபை துணைத்தலைவர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.