கிருஷ்ணகிரி அருகே நில மீட்பு போராட்டம்:விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்-போலீசார் தள்ளுமுள்ளு 149 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே நில மீட்பு போராட்டத்தின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பாக 149 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே நில மீட்பு போராட்டத்தின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பாக 149 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம்
கிருஷ்ணகிரி அருகே உள்ள கங்கலேரி ஊராட்சிக்கு உட்பட்ட மரிக்கம்பள்ளி கிராமத்தில் 30 பேருக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கடந்த 1984-ம் ஆண்டு 1.25 ஏக்கர் நிலம் பிரித்து வழங்குவதற்காக கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நிலம் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.
இதையடுத்து நிலத்தின் உரிமையாளர்கள், தங்களுக்கு அந்த நிலத்தை திரும்ப தரும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே ஆதிதிராவிட துறை சார்பில் ஒதுக்கப்பட்ட நிலங்களை பயனாளிகளுக்கு பிரித்து தருமாறு மரிக்கம்பள்ளி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் மாதேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
149 பேர் கைது
அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு, 38 ஆண்டுகள் ஆன நிலையிலும், தங்கள் நிலங்களை வருவாய்த்துறையினர் அளந்து கொடுக்கவில்லை எனக்கூறி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தனி தாசில்தார், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அவர்களை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாரை மீறி சம்பந்தப்பட்ட நிலத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 39 பெண்கள் உள்பட 149 பேரை கைது செய்தனர்.