குட்டி குளியல் போட்ட அரிசிகொம்பன் யானை
கோவில்பட்டியில் வெயிலின் தாக்கத்தால் அரிசிகொம்பன் யானை குட்டி குளியல் போட்டது.
கோவில்பட்டி:
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த வாரம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிசி கொம்பன் யானை யை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அங்கிருந்து நெல்லை மாவட்டம் களக்காடு வனப் பகுதிக்கு லாரியில் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலையில் தேனியில் இருந்து லாரியில் புறப்பட்ட அரிசி கொம்பன் யானை விருதுநகர் வழியாக தூத்துக்குடி மாவட்ட எல்லை பகுதியான கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டி பகுதிக்கு வந்தது. அங்கு வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனம் கொண்டு வரப்பட்டு நிலைய பொறுப்பு அதிகாரி மனோஜ் குமார், ஏட்டு தங்க மாரியப்பன் தலைமையில் வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரிசி கொம்பன் யானையை குளிர்வித்தனர். அங்கு குட்டி குளியலை முடித்து கொண்டு, அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பலத்த பாதுகாப்புடன் நெல்லை நோக்கி யானை அழைத்து செல்லப்பட்டது. மதியம் கயத்தாறு டோல்கேட்டை யானை ஏற்றிய லாரி கடந்து சென்றது. அப்போது சாலை ஓரத்தில் ஏராளமான பொதுமக்கள் நின்று யானையை வேடிக்கை பார்த்தனர்.