பழனியில் புதர்மண்டி கிடக்கும் நீர்நிலைகள்


பழனியில் புதர்மண்டி கிடக்கும் நீர்நிலைகள்
x
தினத்தந்தி 19 Aug 2023 1:00 AM IST (Updated: 19 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், புதர்மண்டி கிடக்கும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திண்டுக்கல்

விவசாய ஆதாரம்

பழனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாகும். நெல், கரும்பு, மக்காச்சோளம் மற்றும் காய்கறி, பழப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு ஆகிய அணைகள் உள்ளன. இந்த அணைகளில் இருந்து கால்வாய்கள் மூலம் செல்லும் தண்ணீர் குளங்களில் நிரப்பப்பட்டு பயிர் சாகுபடி நடைபெறுகிறது.

அதேபோல் அணைகளில் இருந்து வெளியேறும் நீர் வரட்டாறு, பாலாறு, பொருந்தலாறாக ஓடுகிறது. இந்த ஆறுகளில் தண்ணீர் செல்லும்போது அதன் சுற்று பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் ஆற்றை ஒட்டிய தோட்டங்களில் கிணற்று பாசனம் மூலம் சாகுபடி நடக்கிறது. எனவே பழனி பகுதியில் விவசாயத்துக்கு முழுமூச்சாய் ஆறு, கால்வாய்களே உள்ளன.

ஆக்கிரமிப்பில் நீர்நிலைகள்

முக்கியத்துவம் பெற்ற கால்வாய், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் எல்லாம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி கிடக்கிறது. அதாவது அமலை செடிகள், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. மேலும் குப்பை கொட்டும் இடமாக கால்வாய்கள் மாறியுள்ளது. இதனால் நீரோட்ட பாதையில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. விளைவு கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதில் பிரச்சினை ஏற்படுவதோடு நீர்நிலைகளும் மாசடைகின்றன.

அந்த வகையில் பழனி வரட்டாறு, வையாபுரிக்குள பிரதான கால்வாயில் கரையே தெரியாத அளவுக்கு அமலை செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. போதாக்குறைக்கு பழைய துணிகள், குப்பைகளும் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் தண்ணீர் ஓட்டமின்றி தேங்கி கிடக்கிறது. எனவே கடும் துர்நாற்றம் வீசுகிறது. சில இடங்களில் நீர்ப்பிடிப்பை ஆக்கிரமித்து தென்னை, மா உள்ளிட்ட மரங்களை சிலர் வளர்த்து வருகின்றனர்.

எனவே தூர்ந்து கிடக்கும் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story