வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் பொதுப்பணித்துறை: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பொதுப்பணித்துறை தற்போதே ஆயத்தமாகி வருகிறது. அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வே.வேலு அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை சார்பில் பருவ மழையை எதிர்கொள்வதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு துறையின் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், தலைமை என்ஜினீயர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு வழங்கிய உத்தரவுகள் வருமாறு:-
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப்பணிகள் அனைத்தும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்க வேண்டும். ஆகஸ்டு மாதத்தை பாலம் பராமரிப்பு மாதமாக கொண்டு, பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள், வடிகால்களில் அடைப்புகள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும்
சாலைகளை தோண்ட கூடாது
குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், மெட்ரோ, கழிவுநீரகற்று வாரியம் போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை மறுசீரமைப்பு செய்து பணிகளை முடிக்க வேண்டும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சாலைகளை தோண்ட அனுமதி அளிக்கக்கூடாது.
சாலை ஓரங்களில் உள்ள காய்ந்து, உடையும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மின் அறுவை எந்திரம், ஜெனரேட்டர், மின்சார நீரேற்று பம்புகள் மற்றும் போன்ற அனைத்து எந்திரங்களையும் உடனடியாக கொண்டு செல்ல ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவைகளின் அடிப்படையில் மணல் பைகளையும், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழைநீரால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு, முன்கூட்டியே சீரமைக்க தயாராக இருக்க வேண்டும். அவசர கால பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மழைக்காலத்தில் வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் பாதசாரிகளின் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க தேவையான நீரேற்று பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தடுப்பு வலைகள்
சென்னையில் அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஜவகர்லால் நேரு சாலை, கத்திப்பாரா முதல் கோயம்பேடு வரை, ஜெனரல் பீட்டர்சன் சாலை, காந்தி இர்வீன் பாலம், திருவள்ளுவர் சாலை, ராமபுரம் சாலை, கொளத்தூர் சாலை, சென்னை 'தினத்தந்தி' அலுவலகம் முன்பு போன்ற இடங்களில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
இந்த ஆண்டு 46 நிரந்தர வெள்ள சீரமைப்பு பணிகளுக்கு ரூ.105 கோடி மதிப்பில் நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. உடனடியாக ஒப்பந்தம் கோரப்பட்டு, அனைத்து பணிகளும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். கொளப்பாக்கம் சாலை, அணை ஏரி போன்ற இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளை கண்டறிந்து விரைந்து முடிக்க வேண்டும். மேலும், இந்த ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள வடிகால்களில், மண், குப்பைகள் போன்றவை வடிகால்களில் செல்லாத வகையில், "தடுப்பு வலைகள்" விரைவாக அமைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவுகளை வழங்கி உள்ளார்.