சர்வதேச விருதுகளை கலெக்டரிடம் ஒப்படைத்த மாற்றுத்திறனாளிகள்- அரசு வேலை கிடைக்காததால் விரக்தி


சர்வதேச விருதுகளை கலெக்டரிடம் ஒப்படைத்த மாற்றுத்திறனாளிகள்- அரசு வேலை கிடைக்காததால் விரக்தி
x

அரசு வேலை கிடைக்காததால் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பெற்ற விருதுகளை கலெக்டரிடம் 2 மாற்றுத்திறனாளிகள் திரும்ப ஒப்படைத்தனர்.

மதுரை


அரசு வேலை கிடைக்காததால் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பெற்ற விருதுகளை கலெக்டரிடம் 2 மாற்றுத்திறனாளிகள் திரும்ப ஒப்படைத்தனர்.

பதக்கங்கள்

மாற்றுத்திறனாளி பெண் விளையாட்டு வீரர்களான சங்கீதா, தீபா ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து தாங்கள் இதுவரை சர்வதேச மற்றும் தேசிய அளவில் பெற்ற விருதுகள், பதக்கங்கள் ஆகியவற்றை திரும்ப வழங்க முயற்சித்தனர். ஆனால் கலெக்டர் அதனை பெற்று கொள்ளாமல் சமரசம் பேசினார். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கைகள் மனு ஒன்று அளித்தனர்.

சங்கீதா கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கு போலியோவால் 2 கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவேன். விளையாட்டு மீதான ஆர்வத்தால் மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். உலக அளவில் இந்தியா விற்காக லண்டன், துபாய், சீனா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் நடந்த விளையாட்டு போட்டிகளில் குண்டு, வட்டு, ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று இருக்கிறேன். இந்த சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் பெண்மணி ஆவேன். நான் பிளஸ்-2 படித்து இருக்கிறேன். ஒரு பெண் குழந்தை உள்ளது. எந்த வேலைவாய்ப்பும் இல்லாமல் இருக்கிறேன். அதனால் வறுமையின் பிடியில் சிக்கி உள்ளேன். எனக்கு உரிய வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கல்பனா சாவ்லா விருது

தீபா கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவேன். எம்.ஏ., எம்.பி.ல். தமிழ் வழியில் படித்து இருக்கிறேன். சர்வதேச அளவில் 2002-ம் ஆண்டு நடந்த பேட்மிண்டன் போட்டியில் 2 வெள்ளி பதக்கம், 2004-ம் ஆண்டு பெல்ஜியத்தில் நடந்த தடகள போட்டியில் ஒரு வெள்ளி, 2 வெண்கல பதக்கம், 2005-ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த தடகள போட்டியில் 2 வெண்கல பதக்கம், 2006-ம் மலேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்ந்து இருக்கிறேன்.

நடவடிக்கை

தமிழக அரசு 2010-ம் ஆண்டு எனக்கு சுதந்திர தினவிழாவில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியிடம் இருந்து கல்பனா சாவ்லா விருது பெற்றேன். அப்போது அவரிடம், அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அவரும் வழங்குவதாக கூறினார். ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. கடந்த 12 ஆண்டுகளாக அரசு வேலை கேட்டு பல மனுக்கள் கொடுத்து இருக்கிறேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே எனக்கு அரசு வேலை கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story