நாகர்கோவில் மாநகராட்சியில் வரி செலுத்த 'கியூஆர்கோடு' வசதி
நாகர்கோவில் மாநகராட்சியில் வரி செலுத்த ‘கியூஆர்கோடு’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கியூஆர்கோடை அனைத்து வீடுகளிலும் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சியில் வரி செலுத்த 'கியூஆர்கோடு' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கியூஆர்கோடை அனைத்து வீடுகளிலும் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'கியூஆர்கோடு' வசதி
தற்போதைய நவீன காலத்தில் அனைத்துமே தொழில்நுட்பமயமாகி விட்டது. முக்கியமாக வங்கிக்கு சென்று கால் கடுக்க காத்திருந்து பணம் எடுத்த காலம் போய் தற்போது ஆன்லைன் செயலிகள் மூலமாக பண பரிவர்த்தனை சுலபமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளில் இருந்தே மாநகராட்சி சேவைகளை பெரும் வகையில் கியூஆர்கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக கியூஆர்கோடு அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட உள்ளது.
கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தே வரி செலுத்துதல், புகார் தெரிவித்தல் மற்றும் இதர மாநகராட்சி சேவைகள் பெற முடியும். அதாவது கியூ ஆர் கோடை செல்போனில் ஸ்கேன் செய்தால் மாநகராட்சியின் சமூக வலைதளத்துக்குள் நேரடியாக செல்ல முடியும்.
அனைத்து வீடுகளிலும் ஒட்டப்படுகிறது
பின்னர் அதில் கொடுக்கப்பட்டு உள்ள பல்வேறு சேவைகளை வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் பெற முடியும். அதன்படி முதற்கட்டமாக 28-வது வார்டு பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கியூ ஆர் கோடு நேற்று ஒட்டப்பட்டது. மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் உத்தரவின் பேரில் இந்த ஏற்பாடு நடந்து வருகிறது. இதை தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் கியூ ஆர் கோடு ஒட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.