விற்பனையாளர்கள் தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்


விற்பனையாளர்கள் தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்
x

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விற்பனையாளர்கள் தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று வேளாண் அதிகாரி அறிவுறுத்தினார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

பயிற்சி

ஓசூரில் விதை விற்பனையாளர்களுக்கான ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு, தர்மபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் தலைமை தாங்கி பேசியதாவது:-

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு தரமான விதைகளை வினியோகிக்க வேண்டும். கடையின் முகப்பில் உள்ள விலை விவரப்பட்டியலில் விதைகளின் விலையை தவறாமல் ஒவ்வொரு நாளும் அன்றைய தேதியிட்டு தெளிவாக தெரியும்படி பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து விதைகளையும், பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் உர சிப்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி முளைப்பு திறனுக்கு குந்தகம் இல்லாமல் முறையாக பராமரிக்க வேண்டும். புதிய இருப்பு பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும். விதை இருப்பு பதிவேட்டினை தினமும் கழித்து சரிபார்த்து முறையாக பராமரிக்க வேண்டும். விதை உரிமத்தினை பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

பொருந்தாத ரகங்கள்

அனைத்து விதை கொள்முதலுக்கும், கொள்முதல் பட்டியல், பதிவுச்சான்று முளைப்புத்திறன் சான்று ஆகியவை அவசியம். தனித்தனி கோப்பாக பரமரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் மற்றும் ரகத்தின் பெயர், குவியல் எண், காலாவதி தேதி, பாக்கெட்டின் எடை, விலை, விவசாயின் பெயர், ஊர், தொலைபேசி எண் மற்றும் விவசாயி மற்றும் கடைக்காரரின் கையொப்பமிட்ட ரசீதை வழங்க வேண்டும். குறிப்பிட்ட பருவத்திற்கு உகந்த ரகங்களை மட்டுமே விற்க வேண்டும். பருவத்திற்கு பொருந்தாத ரகங்களை விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். விதை வினியோகஸ்தர்கள் அனைத்து குவியல்களுக்கும் பணி விதை மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டு தரத்தினை உறுதிபடுத்திய பின்னரே விற்பனையாளருக்கு அனுப்ப வேண்டும்.

சட்டப்படி குற்றம்

அதிகபட்ட விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விதைகளை பைகளில் இருந்தோ அல்லது பாக்கிங்கில் இருந்தோ பிரித்து விற்பனை செய்யக்கூடாது. காலாவதியான எந்த விதைகளையும் கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும். எனவே அனைத்து விதை விற்பனையாளர்களும் கவனத்துடன் விவசாயிகள் நலன் சார்ந்து விதை விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில், 50-க்கும் மேற்பட்ட விதை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story