பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை
பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
சிவகாசி,
பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
ஒரே நாளில் 2 விபத்து
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று இரவு சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 5 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நான் இங்கு வந்துள்ளேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தேன். அவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்க டாக்டர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2 விபத்துகள் நடந்துள்ளது. இனிவரும் காலத்தில் இது போன்ற விபத்துகள் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நிவாரணம்
விபத்துகளை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைத்து பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்படும். விதிமீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விடும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. இது சட்டப்படி குற்றம்.
இது போன்ற விதிமீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு தொழிலையும் காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது குறித்து ஆலை உரிமையாளர்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேசப்படும். விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில நிர்வாகி வனராஜா, மாநகர செயலாளர் உதயசூரியன், மேயர் சங்கீதா இன்பம், விக்னேஷ் பிரியா காளி ராஜன், மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.