திருமங்கலம் அருகே கறி விருந்தில் தகராறு;தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு- 3 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
திருமங்கலம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வைத்த கறி விருந்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வைத்த கறி விருந்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேர்த்திக்கடன்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளத்தை சேர்ந்தவர் தனசேகரன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனசேகரன் நேர்த்திக்கடனுக்காக திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் நேற்று கிடாய் வெட்டி கறி விருந்து வைத்தார்.
இந்த விருந்துக்கு அவரது நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேதகிரி மற்றும் திருமங்கலம் அருகே தொட்டியபட்டி பகுதியை சேர்ந்த கணபதி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் விருந்தில் கலந்து கொண்டனர்.
மதுபோதையில் தகராறு
விருந்துக்கு வந்தவர்களில் சிலர் கோவிலுக்கு பின்புறம் உள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்தினர். மதுபோதை அதிகமாகவே அங்கிருந்த கணபதி மற்றும் வேதகிரி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வேதகிரி, நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என காண்பிக்கிறேன் பார் எனக்கூறி ஆத்திரத்துடன் சென்றார்.
பின்னர் தனது காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி திடீரென சுட்டார். கறி விருந்தில் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணை
இந்நிலையில் சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்கள் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வேதகிரி தனது காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தகவல் கிடைத்ததும் உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார் துப்பாக்கியால் சுட்ட வேதகிரியை உடனடியாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கறி விருந்து வைத்த தனசேகரன் மற்றும் வேதகிரியின் அலுவலக உதவியாளர் சக்திவேல், கணபதி ஆகிய 3 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேதகிரியை வலைவீசி தேடிவருகின்றனர்.
பரபரப்பு
சம்பவம் குறித்து திருமங்கலம் ஆர்.டி.ஓ. சவுந்தர்யா மற்றும் தாசில்தார் சிவராமன் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கறி விருந்தில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.