கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்


கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 27 Jun 2023 1:00 AM IST (Updated: 27 Jun 2023 3:31 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி

தமிழகத்தில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். உரிமம் பெற பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், கல்குவாரியை நடத்த இடையூறு செய்யும் போலி சமூக ஆர்வலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தேனி மாவட்டத்தில் கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள 52 கல்குவாரிகள், 46 கிரஷர்கள் ஆகியவை நேற்று இயங்கவில்லை. இந்த குவாரிகளை சார்ந்து இயங்கிய 500-க்கும் மேற்பட்ட லாரிகளும் ஓடவில்லை. கல்குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

இதேபோல் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் செயல்படும் 20 கல்குவாரிகள், 20 கிரஷர்கள் உரிமையாளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் ஜெகநாதன் கூறுகையில், இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகள், கிரஷர்கள் உரிமையாளர்கள் பங்கேற்று உள்ளனர். மாவட்டத்தில் மட்டும் தினமும் சுமார் ரூ.3 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என்றார்.


Next Story