மேகதாது அணை, நீட் தேர்வு விலக்கு போன்ற மாநில உரிமைகளுக்காக பா.ஜனதா போராட்டம் நடத்தாதது ஏன்? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி


மேகதாது அணை, நீட் தேர்வு விலக்கு போன்ற மாநில உரிமைகளுக்காக   பா.ஜனதா போராட்டம் நடத்தாதது ஏன்?  டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
x

மேகதாது அணை, நீட் தேர்வு விலக்கு போன்ற மாநில உரிமைகளுக்காக பா.ஜனதா போராட்டம் நடத்தாதது ஏன்? என்று பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலம்

சேலம்,

பேட்டி

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பா.ம.க. 2.0 என்ற புதிய செயல் திட்டத்தில் கல்வி, சுகாதாரம், நீர் மேலாண்மை, வேளாண்மை, வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், மதுவிலக்கு, நேர்மையான நிர்வாகம் உள்ளிட்டவைகளை முன்நிறுத்தி செயல்பட்டு வருகிறோம். எங்களுடைய இலக்கு 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி அமைப்பது தான்.

மறைந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி எனக்கு மிகவும் பிடித்தமான தலைவர். சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர். இந்தியாவில் தலை சிறந்த தலைவராகவும் விளங்கினார்.

கருணாநிதியையும், டாக்டர் ராமதாசையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். இன்றைய தினம் கருணாநிதியின் பிறந்தநாளில் அனைவரும் அவரை போற்றுவோம்.

சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்

தமிழக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோருக்கு இடையே ஈகோ தவிர்த்து சுமுகமான உறவு இருக்க வேண்டும். இருவரும் அரசியல் செய்யக்கூடாது. தமிழக மக்களின் நலன், உணர்வுகளை புரிந்து கொண்டு சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்து கடந்த ஓராண்டில் 8 மாதங்களுக்கு மேலாக கொரோனாவை ஒழிப்பதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பாக செயல்பட்டார். அதேநேரத்தில், சுகாதார பணிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும்.

நீட் தேர்வில் விலக்கு

குறிப்பாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த மதுக்கடையும் மூடவில்லை. ஓராண்டு முடிவடைந்த நிலையில், வரும் 4 ஆண்டுகளில் எத்தனை மதுக்கடைகள் மூடப்படும் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இளைய சமுதாயத்தை சீரழித்து வரும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மது, போதை பழக்கங்களை ஒழிக்க அரசு சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் சுமார் 60 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் எதிரானது.

இங்கு கல்வித்தரம் குறைவாக உள்ளது. எனவே, தான் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வினால் பயிற்சி மையங்கள் தான் பெருகி வருகிறது.

அண்ணாமலை போராட தயாரா?

இந்தியாவில் பா.ஜ.க. பெரிய கட்சி. ஆனால் தமிழகத்தில் வளர்ந்து வரும் சிறிய கட்சியாக உள்ளது. ஆனால் நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் கன்னியாகுமரி தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. தி.மு.க.விற்கு பா.ஜ.க. எதிர்க்கட்சி இல்லை. நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி.

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி தான் நடக்கிறது. எனவே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட தயாரா?. மேகதாது அணை, நீட் தேர்வு விலக்கு போன்ற மாநில உரிமைகளுக்காக பா.ஜனதா போராட்டம் நடத்தாதது ஏன்?

மேகதாது அணை என்பது ஒரு சாபக்கேடு. அங்கு அணை கட்ட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்திற்கு திருப்பி விட வேண்டும். இது பல ஆண்டுகால கோரிக்கையாகும். அணையில் இருந்து ஆண்டுதோறும் 40 முதல் 120 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது.

எனவே, அதில் 5 டி.எம்.சி. தண்ணீரை சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தும் வகையில் சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்டநதி ஆகியவற்றில் திருப்பி விட வேண்டும். இதனால் சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். எனவே, கடந்த ஆட்சியில் பெயரளவுக்கு தொடங்கப்பட்ட மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், வன்னியர் சங்க மாநில செயலாளர் மு.கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், வக்கீல் விஜயராசா, மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் கதிர்.ராசரத்தினம், மாவட்ட அமைப்பு செயலாளர் அன்புக்கரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story