வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்ட விவகாரம்: தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
புதுக்கோட்டையில் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேருக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, அந்த மாணவர்கள் நேற்று மீண்டும் தேர்வு எழுதினர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் கடந்த 5-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தேர்வு நடைபெற்று வந்தது. ஒரு சில பாடப்பிரிவுகளுக்கு கடந்த 23-ந் தேதியுடன் தேர்வு முடிவடைந்தது. தொழிற்கல்வி பாடப்பிரிவுக்கு நேற்றுடன் பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த 23-ந் தேதி நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் ஒரு தேர்வுக்குரிய வினாத்தாள் 2 மாணவர்களுக்கு மாற்றி வழங்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு நேற்று மீண்டும் தேர்வு நடைபெற்றது. இது பற்றிய விவரம் வருமாறு:-
புதுக்கோட்டையை சேர்ந்தவர் கவிராஜன். இவர் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பில் தொழிற்கல்வி (இ.எம்.ஏ.) பாடப்பிரிவில் படித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். அதே வகுப்பில் யுவராஜ் என்ற மாணவரும் படித்து வருகிறார். இவர்கள் பொதுத்தோ்வை அதே பள்ளியில் எழுதினர். கவிராஜன் மாற்றுத்திறனாளி என்பதால் ஆசிரியர் உதவியுடன் தேர்வை எழுதினார். யுவராஜ் வழக்கமான தேர்வறையில் சக மாணவர்களுடன் தேர்வு எழுதினார்.
வினாத்தாள் மாற்றி வினியோகம்
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி நடந்த பொதுத்தேர்வின் போது தொழிற்கல்வியில் அடிப்படை மின் பொறியியல்- கருத்தியல் பாடத்திற்குரிய வினாத்தாளுக்கு பதிலாக அடிப்படை மின்னணு பொறியியல் பாடப்பிரிவு வினாத்தாள் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் வினியோகிக்கப்பட்டுள்ளது. இது தொழிற்கல்வியில் வேறு பாடப்பிரிவுக்கான வினாத்தாளாகும்.
இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜ் அறை ஆசிரியரிடம், வினாத்தாள் மாறி இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அவர் மாணவரை தேர்வு எழுதும்படி கூறியிருக்கிறார். அறையில் மற்ற மாணவர்களுக்கு வினாத்தாள் சரியாக இருந்ததாக கூறப்படுகிறது.
புதிய வினாத்தாள் தயாரிப்பு
இதேபோல் கவிராஜன் தனி அறையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதிய நிலையில், அவருக்கும் இதே பாடத்திற்குரிய வினாத்தாள் தான் என தெரிவித்துள்ளனர். இதனால் 2 பேரும் வேறு வழியில்லாமல் படிக்காத பாடத்திற்கு பொதுத்தேர்வை எழுதினர். இந்த நிலையில் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டு, அதனை தேர்வு எழுத வைத்தது தொடர்பாக கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திய பின் பள்ளிக்கல்வி துறை மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பின் இவர்கள் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 2 பேருக்கு மட்டும் அடிப்படை மின் பொறியியல்-கருத்தியல் பாடத்திற்கான வினாத்தாள் புதிதாக தயாரித்து அனுப்பப்பட்டது.
மீண்டும் தேர்வு எழுதினர்
இதைத்தொடர்ந்து பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கவிராஜன், யுவராஜ் ஆகிய 2 பேருக்கு அடிப்படை மின் பொறியியல்-கருத்தியல் பாடத்தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. கவிராஜன் மாற்றுத்திறனாளி என்பதால் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. அவர் மதியம் 2.15 மணிக்கு தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தார். தேர்வு எளிதாக இருந்ததாகவும், நன்றாக எழுதியிருப்பதாகவும் கூறினார். 2 பேருக்காக நடந்த பொதுத்தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையத்திற்கு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
2 பேர் பணியிடை நீக்கம்
இதற்கிடையில் மாணவர்களுக்கு வினாத்தாளை மாற்றி வழங்கிய விவகாரத்தில் தேர்வு அறை முதன்மை கண்காணிப்பாளரான அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதன் மற்றும் துறை அலுவலரான லம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை சுபத்ரா ஆகிேயாரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பிளஸ்-2 பொதுத்தேர்வில் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதில் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி மாறியது?. அதனை மாற்றி வழங்கியது எப்படி? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.