டெல்டா மாவட்டங்களில் கேள்விக்குறியாகும் சம்பா சாகுபடி


டெல்டா மாவட்டங்களில் கேள்விக்குறியாகும் சம்பா சாகுபடி
x

மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதால், சம்பா சாகுபடியைத் தொடங்குவதற்கு டெல்டா விவசாயிகள் தயக்கம் காட்டுவதால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் நாற்றுகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது

தஞ்சாவூர்

மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதால், சம்பா சாகுபடியைத் தொடங்குவதற்கு டெல்டா விவசாயிகள் தயக்கம் காட்டுவதால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் நாற்றுகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.

சம்பா சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் இயல்பான பரப்பளவான 3.25 லட்சத்தை மிஞ்சி 5.28 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் 3.37 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 3.75 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1.62 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கரிலும் என மொத்தம் ஏறத்தாழ 10.55 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குறுவை சாகுபடிக்கே ஏறக்குறைய 50 நாட்களுக்கு காவிரி நீர் தேவைப்படுகிறது.

விவசாயிகள் தயக்கம்

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்காததால், மேட்டூர் அணையின் நீர் இருப்பு நேற்று நிலவரப்படி 21.32 டி.எம்.சி. மட்டுமே இருந்தது. கர்நாடகத்திடம் இருந்து இன்னும் எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட முடியாத நிலை நிலவுகிறது.

இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் மோட்டார் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே சம்பா சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஆனால் பெரும்பான்மையாக கொண்ட ஆற்றுப்பாசன விவசாயிகளிடையே சம்பா சாகுபடி தொடங்குவதற்கு தயக்கம் நிலவுகிறது.சம்பா பருவத்தைப் பொருத்தவரை ஆடி 18-ந் தேதி முதல் நீண்ட கால விதை நெல் ரகங்களுக்கான விதைப்பு பணி தொடங்குவது வழக்கம்.ஆனால், குறுவை சாகுபடியில் இருந்த விறுவிறுப்பு சம்பா பருவ விதைப்பு பணியில் இல்லை. இதன் காரணமாக நாற்றுகள் விற்பனை மந்தமாக இருக்கிறது.

நீண்ட கால விதை நெல் ரகங்களைப் பொருத்தவரை ஆகஸ்டு15-ந் முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரையும், மத்திய கால ரகங்களை செப்டம்பர் மாதம் முழுவதும் விதைப்பு செய்ய வேண்டிய காலமாகும்.

கேள்விக்குறியாகும் நிலை

இந்தக் காலகட்டத்தில் விதைப்பு செய்தால்தான் தொடர் மழையில் இருந்து பயிர் பாதிப்பைத் தவிர்க்க முடியும் என்பது மூத்த வேளாண் வல்லுநர் குழுவின் பரிந்துரையாகும். ஆனால், காவிரி நீர் வரத்து இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் சம்பா விதைப்பு பணிகளைத் தொடங்குவதற்கு விவசாயிகளிடையே தயக்கம் நிலவுகிறது. இதனால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர்

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சம்பா சாகுபடிக்கு ஏறத்தாழ 150 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், மேட்டூர் அணையில் தற்போது ஏறக்குறைய 21 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் குறுவை சாகுபடியைக் காப்பாற்றுவதற்குத்தான் கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீர் பெற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால், சம்பா சாகுபடிக்கான எந்தவிதமான அறிவிப்பும் அரசு தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.

எனவே, சம்பாவுக்கும் காவிரி நீருக்கான உத்தரவாதம் அரசிடமிருந்து கிடைத்தால்தான் சாகுபடியைத் தொடங்குவதற்கு நம்பிக்கை கிடைக்கும் என்றனர்.


Next Story