ஆங்கில பாடத்தில் மாணவர்களை குழப்பமடைய செய்த கேள்விகள்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் சில கேள்விகளால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி மொழிபாடத்துக்கான தேர்வுடன் தொடங்கியது. நேற்று ஆங்கில பாட தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில் ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில் குழப்பமான கேள்விகளால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்ததாக கூறப்படுகிறது. அதாவது, 1 முதல் 6 வரையிலான கேள்விகளில் தலா 3 அருஞ்சொற்பொருள் அறிக, எதிர்ச்சொல் அறிக என்பதற்கு பதிலாக 6 கேள்விகளையும் அருஞ்சொற்பொருள் அறிக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே அதற்கு உரிய மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக திருச்சி மாவட்ட செயலாளர் வே.குமார் விடுத்துள்ள அறிக்கையில், இன்று (நேற்று) நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில் எதிர்ச்சொல் பிரிவில் வினா எண் 4, 5, 6 ஆகியவற்றுக்கு உரிய தலைப்பு வழங்கப்படவில்லை. மேலும் வினா எண்:28-ல் சாலை வரைபடத்தில் வழி அடைக்கப்பட்டுள்ளது. இதுமாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தவறான வினாக்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.