தமிழக தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக மின்சார இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு


தமிழக தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக மின்சார இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
x

தமிழகத்தினுடைய தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் தொழில் நிறுவனங்களுக்கு விரைவான மின்சார இணைப்பை கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை

சென்னையை அடுத்த எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வாரியத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (திட்டம்) ஆர்.எத்திராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து நடந்த ஆய்வு கூட்டத்தில், ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்ட பணி நிறைவுக்கான அட்டவணையை தவறாது பின்பற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். திட்டத்தின் மற்ற இதர பணிகளான கரி கையாளும் அமைப்பு, சாம்பல் கையாளும் அமைப்பு, கடல்நீரை குடிநீராக்கும் அமைப்பு போன்ற அமைப்புகளுடன் கூட்ட அரங்கில் ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் படி தொழில் துறையில் முன்னேற்றம் கண்டு வரும் தமிழகத்தின் எரிசக்தி தேவையின் தன்னிறைவை கருத்தில் கொண்டு கட்டுமானத்தில் இருக்கும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-

எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பணிகள் முடிக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும். தற்போது 53 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவாக முடித்து மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரூ. 7 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான, இந்த சிறப்பு திட்டம் 1,320 மெகாவாட் மின் உற்பத்தியை தொடங்கும் போது மின்சார தேவை பூர்த்தி செய்யப்படும்.

முதல் அலகில் வருகிற 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியை தொடங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதே ஆண்டு ஜூன் மாதம் மற்றொரு யூனிட் உற்பத்தியை தொடங்குவதற்காக பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 220 மெகாவாட் அளவுக்கு மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தியை நிறுவு திறனில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தினுடைய தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் தொழில் நிறுவனங்களுக்கு விரைவான மின்சார இணைப்பை கொடுக்க வேண்டும்.

தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவு வழங்கியுள்ளார். நிலக்கரி ஏறத்தாழ 4 கப்பல்களில் வந்துள்ளது. இன்னும் 2 கப்பல்கள் தான் வரவேண்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story