பயன்பாட்டுக்கு வந்த ரேடார் கண்காணிப்பு நிலையம்
ராமேசுவரத்தில் இருந்து இந்திய கடல் எல்லை வரையிலான கடல் பகுதியை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் ஓலைகுடா கடற்கரையில் அமைக்கப்பட்டு வந்த ரேடார் கண்காணிப்பு நிலையம் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து இந்திய கடல் எல்லை வரையிலான கடல் பகுதியை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் ஓலைகுடா கடற்கரையில் அமைக்கப்பட்டு வந்த ரேடார் கண்காணிப்பு நிலையம் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தது.
முக்கிய கடற்கரை பகுதி
தமிழக கடற்கரை பகுதிகளில் ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கி வருகின்றது. ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை பகுதி உள்ளதாலும், ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு அவ்வப்போது கடல் அட்டை, பீடிஇலை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் ராமேசுவரம் உள்ளிட்ட கடல் வழியாக கடத்தி வரப்படுவதுடன் அவ்வப்போது கடத்தல்காரர்கள் மற்றும் அகதிகள் கள்ளத்தனமாக படகுமூலம் தப்பி வந்து செல்வதும் நடைபெறுகின்றது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை பகுதியாக உள்ளதால் இங்கு ஏற்கனவே உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் செயல்பட்டு வருவதுடன் ரோந்து பணிக்காக 4 ஹெலிகாப்டர்களும் மற்றும் ஆள் இல்லாத விமானம் ஒன்றும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
ரேடார் நிலையம்
மண்டபத்திலும் இந்திய கடலோர காவல் படை நிலையம் செயல்பட்டு வருவதுடன் 5-க்கு மேற்பட்ட கப்பல்கள் ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்ட கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ராமேசுவரம் மற்றும் பாம்பன் குந்துகால் பகுதியிலும் இந்திய கடற்படை நிலையம் செயல்பட்டு வருவதுடன் சிறிய ரோந்து படகுகளும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ராமேசுவரம் உள்ளிட்ட கடல் பகுதியை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் ராமேசுவரம் ஓலைகுடா கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையின் சார்பில் புதிதாக கண்காணிப்பு ரேடார் நிலையம் அமைக்கும் பணியானது கடந்த மூன்று மாதத்திற்கு மேலாகவே நடைபெற்று வந்தது. இதனிடையே ஓலைகுடா கடற்கரையில் நடைபெற்று வந்த ரேடார் கண்காணிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது.
துல்லியமாக கண்காணிக்க
தற்போது டவரின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரேடாரில் அதை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 30 மீட்டர் உயரத்தில் டவர் ஒன்று கட்டப்பட்டு அதன் மேல் பகுதியில் அதி நவீன ரேடார் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ரேடார் கண்காணிப்பு நிலையம் செயல்படும் வகையில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் கிடைக்கும் வகையில் நிலைய வளாகத்தை சுற்றி ஏராளமான சூரிய ஒளி மின் தகடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த டவரின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ரேடார் கருவி மூலம் ராமேசுவரத்தில் இருந்து இந்திய கடல் எல்லை வரையிலான கடல் பகுதியை மிக துல்லியமாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.