வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யேஸ்வரர் கோவில்
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி என்பது பழமொழி.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்திப்பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய வேதங்களால் பூஜிக்கப்பட்ட இந்த கோவிலில், வேதம் செடியாகி, கொடியாகி, மரமாகி வழிபட்டதால் இந்த கோவில் உள்ள பகுதி வேதாரண்யம் என்ற பெயரை பெற்றது.
சக்தி பீடம்
64 சக்தி பீடங்களில் சுந்தரி பீடமாக உள்ள இந்த கோவிலில் இறைவனாக வேதாரண்யேஸ்வரரும், வேதநாயகி அம்பாளாகவும் அருள்பாலித்து வருகிறார்கள். அகத்தியர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வேதாரண்யத்தில் பார்வதி தேவியுடன் திருமணக்கோலத்தில் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி அளித்தார்.
ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய 4 வேதங்களும் மனித உருவம் கொண்டு வேதாரண்யேஸ்வரரை பூஜை செய்து வந்தன. கலியுகம் தொடங்கும் நேரத்தில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்ததல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த இக்கோவில் கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி திறந்து வைத்ததாக தல புராணம் கூறுகிறது.
புவனி விடங்கர்
பிரசித்திப்பெற்ற இக்கோவில் தியாகராஜர் வீற்றிருக்கும் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் தியாகராஜர் புவனி விடங்கர் என்றும் அவரது நடனம் ஹம்சபாத நடனம் என்றும், இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்றும் அழைக்கப்படுகிறது.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் (பிப்ரவரி) 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்ப திருவிழா கோவில் வளாகத்துக்குள் உள்ள மணிக்கர்ணிகை தீர்த்தக்குளத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
கல்யாணசுந்தரர்
அப்ே்பாது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சி அம்மன் சமேத கல்யாணசுந்தரர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார்.
தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு மற்றும் வர்த்தக சங்கத்தினர் செய்து இருந்தனர்.