2 ஆண்டு காதலை திடீரென முறித்ததால் ஆத்திரம்: காதலியின் நிர்வாண வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது பண்ருட்டி அருகே பரபரப்பு


2 ஆண்டு காதலை திடீரென முறித்ததால் ஆத்திரம்:  காதலியின் நிர்வாண வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது  பண்ருட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

2 ஆண்டு காதலை திடீரென முறித்ததால் காதலியின் நிர்வாண வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் மகன் முத்தமிழன்(வயது 25). ஓட்டலில் உணவு பார்சலை வாங்கிக்கொண்டு அதை வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்தனர்.

இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஊர் சுற்றி வந்துள்ளனர். அப்போது அவர் அந்த இளம்பெண்ணை மிரட்டி வீடியோ, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.

காதலை முறித்த பெண்

இந்த நிலையில் முத்தமிழனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் திடீரென காதலை முறித்துக்கொண்டார். அதன்படி அவர் உடனடியாக பேசுவதையும் தவிர்த்து விட்டார்.

2 ஆண்டாக பழகிவிட்டு திடீரென காதலை முறித்ததால் முத்தமிழனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே அவர், பல முறை அந்த பெண்ணிடம் பழக்கத்தை தொடர முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

நிர்வாண வீடியோ வெளியீடு

இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன், காதலித்த காலத்தில் நெருங்கி பழகியபோது அவரை மிரட்டி தனது செல்போனில் எடுத்துக்கொண்ட இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இதுகுறித்து முத்தமிழனிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர் அந்த இளம்பெண்ணை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

பின்னர் இதுகுறித்து அந்த இளம்பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுடர்மதி வழக்குப்பதிந்து முத்தமிழனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story